ஆம்புலன்ஸ் கிடைக்காமல் 2 வயது சகோதரன் உடலுடன் தெருவில் அமர்ந்த சிறுவன்; மத்திய பிரதேசத்தில் அவலம்
|மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காத சூழலில் 2 வயது சகோதரனின் உடலுடன் 8 வயது சிறுவன் சாக்கடை ஓரம் தெருவில் அரை மணிநேரம் அமர்ந்துள்ளான்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் அம்பா நகரில் பத்பிரா கிராமத்தில் வசித்து வருபவர் பூஜாராம் ஜாதவ். இவரது 2 வயது மகன் ராஜாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.
முதலில் வீட்டிலேயே சிறுவனை சரி செய்ய ஜாதவ் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். ஆனால், சிறுவனுக்கு தாங்க முடியாத அளவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மொரீனா மாவட்ட மருத்துவமனைக்கு சிறுவனை தூக்கி சென்றுள்ளார். இவர்களுடன் ஜாதவின் 8 வயது மூத்த மகன் குல்ஷணும் சென்றுள்ளார்.
எனினும், மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்து விட்டான். ஏழ்மையில், உதவியற்ற நிலையில் இருந்த பூஜாராம் ஜாதவ், மருத்துவமனை அதிகாரிகளிடம் சிறுவனின் உடலை கிராமத்திற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யும்படி கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால், அவரது வேண்டுகோளை யாரும் ஏற்கவில்லை. அவரிடம் அதிகாரிகள் ஆம்புலன்சுக்கு பணம் கேட்டனர் என பூஜாராம் கூறியுள்ளார்.
இதனால், சிறுவனின் உடலுடன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து சாலையில் அமர்ந்துள்ளார். வாகனம் எதுவும் அந்த வழியே வரவில்லை. அவரிடம் கொடுப்பதற்கு பணமும் இல்லை.
வேறு வழியின்றி, மூத்த மகன் குல்ஷணிடம் சிறுவனின் உடலை கொடுத்து விட்டு, வீட்டுக்கு செல்ல வாகனம் எதுவும் அந்த வழியில் வருகிறதா? என தேடி பார்க்க பூஜாராம் சென்றுள்ளார்.
குல்ஷணும், சகோதரனின் உடலை தனது மடி மீது வைத்து கொண்டு, தந்தை வருவார் என அரை மணிநேரம் வரை தெருவில் அமர்ந்து உள்ளார்.
இதனை கவனித்த பொதுமக்களில் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்து, பூஜாராம் வீட்டுக்கு சென்று விட்டு விடும்படி அதன் ஓட்டுனரை கேட்டு கொண்டனர்.
இதுபற்றி மொரீனா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் வினோத் குப்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, நாங்கள் ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தோம். வாகனம் வரும்போது, பூஜாராம் வெளியே சென்று விட்டார் என கூறியுள்ளார்.