ஆசிரியர் தாக்கியதில் சிறுவன் சாவு
|கதக் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கதக்:
கதக் மாவட்டம் நரகுந்தா தாலுகா ஹட்லி கிராமத்தை சேர்ந்தவர் கீதா(வயது 34). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் பரத்(9). இந்த சிறுவனும், தனது தாய் வேலை செய்யும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இதே பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக முத்தப்பா என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வகுப்பு நேரத்தில் சிறுவனை சரியாக படிக்கவில்லை என கூறி முத்தப்பா திட்டி உள்ளார். ஒரு கட்டத்தில் அவர் சிறுவனை கடுமையாக தாக்கியதுடன், கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து அவனை தள்ளிவிட்டுள்ளார். இதில் மேலிருந்து கீழே விழந்த சிறுவனம் படுகாயம் அடைந்தான். சிறுவன் விழுந்ததை கண்டு ஓடிவந்த சிறுவனின் தாய் உள்பட ஆசிரியர்கள் சிலர், முத்தப்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றுள்ளனர்.
சிறுவன் சாவு
அப்போது முத்தப்பா, சிறுவனின் தாய் உள்பட 2 பேரை கடுமையாக தாக்கினார். இதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர். அப்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே முத்தப்பா அங்கிருந்து தப்பித்து தலைமறைவானார். சிறுவன் பரத் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆசிரியை கீதா மற்றும் பட்டீல் ஆகிய 2 பேருக்கும் கிம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் வைசாலி, போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரகாஷ் ஆகியோர் பள்ளிக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று பார்வையிட்டனர்.
தனிப்படை அமைத்து...
பின்னர், இதுகுறித்து பேசுகையில், சிறுவன் உள்பட 3 பேரை தாக்கிவிட்டு தலைமறைவாக உள்ள ஆசிரியர் முத்தப்பாவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு வந்த நரகுந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிறுவனின் தாய் கீதாவுக்கும், முத்தப்பாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும், இதன் காரணமாக சிறுவனை தாக்கியதும் அந்த சமயத்தில் அவன் உயிரிழந்ததும் தெரியவந்தது.