'அயோத்தி தீபத்திருவிழாவால் நாடே பிரகாசமாக ஒளிர்கிறது' - பிரதமர் மோடி
|அயோத்தி தீபத்திருவிழா இந்தியா முழுவதும் புதிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் பரப்பி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று, 'தீபோத்ஸவ்' எனப்படும் தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அயோத்தியில் 2.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
இந்த தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர். கடந்த 2022-ம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு சாதனை படைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அயோத்தி தீபத்திருவிழாவின் புகைப்படங்களை பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "லட்சக்கணக்கான தீபங்களால் ஜொலிக்கும் அயோத்தி நகரின் தீபத் திருவிழாவால் நாடு முழுவதும் பிரகாசமாக ஒளிர்கிறது. இதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் இந்தியா முழுவதும் புதிய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பரப்பி உள்ளது. பகவான் ஸ்ரீராமர் அனைத்து நாட்டு மக்களுக்கும் நல்லது செய்து, அனைவருக்கும் உத்வேகமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.