< Back
தேசிய செய்திகள்
அன்னபாக்ய திட்டத்தில் கூடுதல் அரிசிக்கு பணம் வழக்கும் திட்டம் தொடக்கம்
தேசிய செய்திகள்

அன்னபாக்ய திட்டத்தில் கூடுதல் அரிசிக்கு பணம் வழக்கும் திட்டம் தொடக்கம்

தினத்தந்தி
|
10 July 2023 2:32 AM IST

அன்னபாக்ய திட்டத்தில் 5 கிலோ கூடுதல் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக அக்கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

காங்கிரஸ் ஆட்சி

சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று, முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. உத்தரவாத திட்டங்களில் முதலாவதாக அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் சக்தி திட்டம் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது.

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதம் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது ரேஷன் கார்டில் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் உள்ளார்களோ அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்காக மாதந்தோறும் 2.29 லட்சம் டன் அரிசி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டது.

பா.ஜனதா தலைவர்கள் விமர்சனம்

இந்த திட்டம் ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். ஆனால் மத்திய அரசு அரிசி கொடுக்க மறுத்துவிட்டதால், இந்த திட்டத்தின் கீழ் தலா 10 கிலோ அரிசி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் அரசை பா.ஜனதா தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். திட்டமிட்டப்படி ஜூலை 1-ந் தேதி ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சி கூறியது. இதனால் கர்நாடக அரசு ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்ய முடிவு செய்தது.

ஆனால் அந்த முயற்சியும் கைகூடவில்லை. அதையடுத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரிசி நிறுவனங்களிடம் இருந்தும் அரிசியை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க திட்டமிட்டது. அதற்கு டெண்டர் விடவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த டெண்டர் பணிகள் முடிவடைந்து அரிசி கொள்முதல் செய்ய நீண்ட நாள் ஆகும் என தெரிகிறது.

அன்னபாக்ய திட்டம்

இந்த நிலையில் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசியுடன் மீதமுள்ள தலா 5 கிலோ அரிசிக்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 என்ற வீதத்தில் ரேஷன் அட்டையில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தலா ரூ.170 பணம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதற்காக தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா அன்னபாக்ய திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு தாரர்களுக்கு 5 கிலோ கூடுதல் அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் ஜூலை 10-ந் தேதி தொடங்கப்படும் என்று கூறினார்.

இன்று தொடக்கம்

அதன்படி அன்னபாக்ய திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டம் இன்று(திங்கட்கிழமை) தொடங்கப்படுகிறது. இதன் தொடக்க விழா பெங்களூருவில் இன்று மாலை 5 மணிக்கு விதான சவுதாவில் நடக்கிறது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மாதம் ரூ.170 வழங்கப்படும் என்றும், ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால் ரூ.850 கிடைக்கும் என்றும் உணவு மற்றும் பொது வினியோகத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு பிற மாநிலங்களிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. அங்கு போதுமான அளவுக்கு அரிசி கிடைத்ததும், இந்த பணம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு ஏழை குடும்பங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் மாநில அரசு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்