டிரைவர்கள் போராட்டம் - மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவு
|சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் டிரைவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய 3 புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து, அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள அச்சட்டங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில் வாகன விபத்து தொடர்பான திருத்தச்சட்டமும் இடம்பெற்றுள்ளது.
அதில், சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் டிரைவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி, டிரக், பேருந்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த ஒரு டிரைவரும் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்துவது இல்லை. அதற்காக 3 ஆண்டுகள் இருந்த தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்துவது தேவையற்றது என டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதிய தண்டனைச் சட்டத்தில் உள்ள இந்த விதிக்கு எதிராக வடமாநிலங்களில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உள்துறை செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மத்திய அரசு சார்பில் இன்று இரவு 7 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.