குடிபோதைக்கு அடிமையான மகன்; கூலிப்படை வைத்து தீர்த்து கட்டிய பெற்றோர்
|மது மற்றும் போதைக்கு அடிமையான மகனை கூலிப்படை வைத்து பெற்றோர் தீர்த்து கட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
கம்மம்,
தெலுங்கானாவில் கம்மம் மாவட்டத்தில் சூரியபேட்டை பகுதியில் வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.
இதுபற்றி ஹுசூர்நகர் காவல் அதிகாரி ராமலிங்கா ரெட்டி கூறும்போது, ஷத்திரிய ராம் சிங் மற்றும் ராணி பாய் தம்பதியின் மகன் சாய்ராம் (வயது 26) என்பவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
சாய்ராம் மது மற்றும் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். பெற்றோரையும் அவர் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், மகனை கொலை செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதற்காக, ராணி பாயின் சகோதரர் சத்யநாராயணாவை அவர்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து, ரவி, தர்மா, நாகராஜூ, சாய் மற்றும் ராம்பாபு ஆகியோர் கொண்ட கூலிப்படையை அவர் தயார் செய்து வைத்து உள்ளார். இதற்காக ரூ.1.5 லட்சம் முன்பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த பின்னர், 3 நாட்களில் மீத தொகையான ரூ.6.5 லட்சம் தரப்படும் என ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு உள்ளது.
இதன் பின்பு, சத்யநாராயணா மற்றும் ரவி இருவரும் குடும்ப காரில் கள்ளேபள்ளி பகுதியில் உள்ள கோவிலுக்கு சாய்ராமை அழைத்து சென்றுள்ளனர். வழியில் மற்றொரு குற்றவாளியும் காரில் ஏறியுள்ளார்.
அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றாக மது குடித்துள்ளனர். சாய்ராம் மது குடித்ததும் அவரை கயிற்றால் கழுத்து பகுதியில் இறுக்கி கொலை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் வாலிபரின் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதவிர, குற்றவாளிகளில் 4 பேரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.