'அக்னிபாத்' என்ற புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
|'அக்னிபாத்' என்ற புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு பணிகள் முற்றிலுமாக முடங்கின. இதுபோன்ற சூழ்நிலையில் ராணுவத்தில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ராணுவத்தின் மூன்று பிரிவுகளிலும் 1.25 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில்,பாதுகாப்புத்துறையில் அக்னிபத் என்ற புதிய திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் என்ற புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிமுகம் படுத்தினார்.
அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
டூர் ஆப் டியுடி என்ற இந்த திட்டத்தில் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ராணுவ செலவுகளை குறைக்கும் வகையில் முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணி. 'அக்னிபாத்' திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கும் என்றார்.
* நாடு தழுவிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அக்னிபத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் பயிற்சி காலம் ஆகும்.
* அக்னிபத் திட்டத்தில் பங்கேற்க கூடியவர்கள் வழக்கமான ஆயுத பாதுகாப்பு படைகளில் பணியமர்த்தப்பட வாய்ப்புகள் வழங்கப்படும்.
* அக்னிபத் திட்டத்தில் பங்குபெறும் 25% நபர்கள் வழக்கமான ராணுவம் உள்ளிட்ட ஆயுத பாதுகாப்பு பணியில் சேர்க்கப்படுவர்.
* நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இளைஞர்களுக்கு ராணுவ சேவை வாய்ப்பை வழங்கவும் அக்னிபத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
* அக்னிபத் என்ற திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்கள் அக்னி வீர் என்ற ஆயுதப்படைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.