< Back
தேசிய செய்திகள்
குளிர்பானத்தில் இறந்த பல்லி கிடந்த விவகாரம்; மெக்டொனால்டு கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
தேசிய செய்திகள்

குளிர்பானத்தில் இறந்த பல்லி கிடந்த விவகாரம்; மெக்டொனால்டு கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

தினத்தந்தி
|
7 Jun 2022 4:57 PM IST

குளிர்பானத்தில் இறந்த பல்லி கிடந்த விவகாரத்தில் மெக்டொனால்டு கடைக்கு ஆமதாபாத் மாநகராட்சி ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.



ஆமதாபாத்,



குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் மெக்டொனால்டு கடைக்கு பார்கவ் ஜோஷி என்பவர் தனது நண்பர்களுடன் சென்றார். அவர் பர்கர் மற்றும் கோக் குளிர்பானம் ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார்.

இதன்பின்னர், கோக் குடித்து கொண்டிருந்தபோது, அந்த பானத்தில் ஒரு பல்லி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்கவ், உடனே அதனை படம்பிடித்து, வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டார். இந்த வீடியோ உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து அவர் இதுபற்றி மெக்டொனால்டு மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் இது குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் வேண்டுமெனில், குளிர்பானம் வாங்க செலுத்திய பணம் திருப்பி தரப்படும் என கூறினார் என்றும் ஜோஷி குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து, ஆமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு ஆய்வு நடத்தி, கடைக்கு சீல் வைத்தனர். மேலும், குளிர்பானத்தின் மாதிரியை எடுத்து பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, மெக்டொனால்டு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில் வாடிக்கையாளர்கள் அனைவரின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உறுதி செய்யப்படும். தரம், சேவை, தூய்மை மற்றும் மதிப்பு ஆகியவை எங்களது வர்த்தக செயல்பாடுகளின் முக்கிய நோக்கம் ஆக இருக்கும் என தெரிவித்தது.

இந்நிலையில், குளிர்பானத்தில் இறந்த பல்லி கிடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலான நிலையில், மெக்டொனால்டு கடைக்கு ஆமதாபாத் மாநகராட்சி ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இதுதவிர, அந்த உணவு விடுதிக்கு 3 மாதங்கள் வரை சோதனை செய்ய செல்வோம் என்றும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அபராதம் செலுத்தப்பட்ட பின்னர், ஆமதாபாத்தின் சோலா பகுதியில் உள்ள மெக்டொனால்டு உணவகம், தூய்மை செய்யப்படுவதற்காக இரண்டு நாள் அவகாசம் அளிக்கப்படும்.

அதன்பின்னர், அதிகாரிகள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதில், அனைத்தும் திருப்தியாக உள்ளது என எங்களது குழு அறிந்த பின்னரே கடை திறக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்