வாக்காளர்கள் தகவல்களை திருடிய விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது; காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி
|வாக்காளர்கள் தகவல்களை திருடிய விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் மற்றும் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸ் மற்றும் கர்நாடக தேர்தல் தலைமை அதிகாரியை சந்தித்து காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தாலும், கர்நாடக தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வரவில்லை. அதனால் தான் இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின்பேரில், வாக்காளர்களின் தகவல்களை திருடியது, பெயர்களை நீக்கிய விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படியும், தவறு செய்த அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யவும் உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எடுத்த முயற்சியும் இதற்கு காரணமாகும்.
பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கருத்து தெரிவித்திருக்கிறார். இதுபற்றி நான் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்க போவதில்லை. ஒரு அரசியல் கட்சியாக காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விவாதித்து தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.