< Back
தேசிய செய்திகள்
40 சதவீத கமிஷன் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கவில்லை; அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

40 சதவீத கமிஷன் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கவில்லை; அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
24 Sept 2022 12:15 AM IST

40 சதவீத கமிஷன் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கவில்லை என்று மாநில அரசு மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு:

சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரூ.15 லட்சம் லஞ்சம்

சட்டசபை கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு குறித்து பிரச்சினை கிளப்பினோம். அதன் மீது விவாதம் நடைபெற்றது. இந்த முறைகேட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் நில முறைகேடு வழக்கில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிறையில் உள்ளார். முறைகேடுகளில் அதிகாரிகளை மட்டுமே கைது செய்துள்ளனர்.

அந்த ஐ.பி.எஸ். அதிகாரியை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவில்லை. அதனால் தான் அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரின் தகவலும் வெளியே வரும். மேலும் பா.ஜனதாவை சோ்ந்த பசவராஜ் தடேசுகர் எம்.எல்.ஏ., ஒருவரிடம் இருந்து ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதை அவரே ஒப்பு கொண்டுள்ளார்.

விசாரணை நடத்தவில்லை

இந்த முறைகேட்டில் ஒரு முன்னாள் முதல்-மந்திரியின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக பசனகவுடா பட்டீல் யத்னாால் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெறவில்லை. இந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் 4 மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அரசு விசாரணை நடத்தவில்லை.

கர்நாடகத்தில் அதிக ஊழல் செய்யும் மாநிலங்களில் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு ஊழல் தீவிரமாக அதிகரித்துவிட்டது. சுதந்திர இந்தியாவில் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் ஊழல் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதவில்லை. ஆனால் முதல் முறையாக கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் பிரதமருக்கு கடிதம் எழுதி 40 சதவீத கமிஷன் பெறப்படுவதாக புகார் கூறினர். ஆனால் இதுகுறித்து சட்டசபையில் விவாதிக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. நாங்களிடம் இந்த அரசின் ஊழல்களை மக்களிடம் எடுத்து செல்வோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்