அழிக்கப்பட்ட 30 ஆயிரம் கோவில்களும் மீட்டெடுக்கப்படும்; ஸ்ரீ ராமசேனை அமைப்பு
|நாட்டில் அழிக்கப்பட்ட 30 ஆயிரம் கோவில்களும் மீட்டெடுக்கப்படும் என ஸ்ரீ ராமசேனை அமைப்பு தெரிவித்து உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் இந்து வலது சாரி அமைப்புகளில் ஒன்றான ஸ்ரீ ராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் இன்று கூறும்போது, மசூதிகளை எழுப்புவதற்காக அழிக்கப்பட்ட 30 ஆயிரம் கோவில்களும் மீட்டெடுக்கப்படும் என கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, உங்களுக்கு தைரியம் இருப்பின் எங்களை தடுத்து நிறுத்துங்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கொல்லப்படுவோம் என எச்சரிக்கை விடுத்தீர்கள். என்ன நடந்தது? இந்துக்களின் ஒற்றை ரத்த துளியை கூட உங்களால் எடுக்க முடியவில்லை.
உங்களுக்கு கொஞ்சமேனும் வெட்கம் இருப்பின், முன்பு அழிக்கப்பட்ட எங்களுடைய கோவில்களை எங்களுக்கு திருப்பி கொடுங்கள். இதுபோன்ற இறுமாப்பினை ஒருபோதும் எங்களால் சகித்து கொள்ள முடியாது.
ஒருவராலும் எங்களை தொட முடியாது. அரசியல் சாசன நடைமுறையை பின்பற்றி சட்டப்பூர்வ முறையில் அந்த கோவில்களை நாங்கள் திரும்ப பெறுவோம் என கூறியுள்ளார்.
கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி ஈஸ்வரப்பா நேற்று பேசும்போது, 36 ஆயிரம் கோவில்கள் அழிக்கப்பட்டு அதன்மீது மசூதிகள் கட்டப்பட்டன என கூறினார். அவர்கள் மசூதிகளை எங்கு வேண்டுமென்றாலும் கட்டி கொள்ளட்டும். வழிபடட்டும். ஆனால், எங்களுடைய கோவில்கள் மீது மசூதிகளை கட்ட நாங்கள் அவர்களை அனுமதிக்கமாட்டோம் என கூறினார்.
அனைத்து 36 ஆயிரம் கோவில்களையும் இந்துக்கள் சட்டரீதியாக மீட்டெடுத்திடுவார்கள் என உங்களுக்கு கூறி கொள்கிறேன் என பேசினார்.
கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி மங்களூரு நகரின் வெளியே பழைய மசூதி ஒன்றின் கீழ் இந்து கோவில் போன்ற கட்டிட வடிவமைப்பு கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மசூதி, கோவில் பற்றிய சர்ச்சை எழுந்தது.
இதேபோன்று, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஞானவாபி மசூதி விவகார மனுக்கள் மீது வருகிற மே 30ந்தேதி (நாளை மறுநாள்) விசாரணை நடைபெறும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.