உத்தராகண்ட் மாநிலத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே 18-வது கூட்டு ராணுவப் பயிற்சி
|இந்திய - அமெரிக்க ராணுவங்களுக்கிடையே கூட்டு ராணுவப் பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
புதுடெல்லி,
இந்திய - அமெரிக்க ராணுவங்களுக்கிடையே சிறந்த நடைமுறைகள், உத்திகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளும் நோக்கத்துடன் கூட்டு ராணுவப் பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய - அமெரிக்க 18-வது கூட்டு ராணுவப் பயிற்சியான "யுத் அப்யாஸ் 2022" உத்தராகண்ட் மாநிலத்தில் இம்மாதம் தொடங்கவுள்ளது. முந்தைய பயிற்சி 2021ம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்றது.
அமெரிக்க ராணுவத்தின் 11-வது வான்படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்களும் இந்திய ராணுவத்தின் அசாம் படைப்பிரிவினரும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்தப் பயிற்சியின் போது, அமைதிக்காப்பு, அமைதியை நிலைநாட்டுதல் ஆகியவை தொடர்பான செயல்பாடுகளும் இடம் பெறும்.
இந்தக் கூட்டுப்பயிற்சியின் போது மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும். இயற்கைச் சீற்றத்தின் போது, நிவாரண நடவடிக்கைகளை விரைவாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படுத்துவதற்கான பயிற்சியை இரு நாடுகளும் பெறவுள்ளன.