< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் ஒரேநாளில் 146 தாசில்தார்கள் பணி இடமாற்றம்
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் ஒரேநாளில் 146 தாசில்தார்கள் பணி இடமாற்றம்

தினத்தந்தி
|
30 July 2023 12:30 AM IST

கர்நாடகத்தில் ஒரே நாளில் 146 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் ஒரே நாளில் 146 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரிகள் மீது அதிருப்தி அடைந்த சில எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்கள். அதாவது மந்திரிகள் தங்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை, சந்தித்து பேச வாய்ப்பு கொடுப்பதில்லை என்று 20 எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு கூறி இருந்தார்கள்.

குறிப்பாக அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் உருவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 27-ந் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் இடமாற்றம் குறித்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், முதல்-மந்திரி சித்தராமையாவிடம் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

146 தாசில்தார்கள் இடமாற்றம்

இந்த நிலையில், கர்நாடகத்தில் ஒரே நேரத்தில் 146 தாசில்தார்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. முதலாம் நிலை மற்றும் 2-ம் நிலை தாசில்தார்கள் 146 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 பட்டியலை அரசு வெளியிட்டு இருந்தது. முதல் பட்டியலில் 84 தாசில்தார்களும், 2-வது பட்டியலில் 46 தாசில்தார்களும், 3-வது பட்டியலில் 16 தாசில்தார்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

22 தாசில்தார்கள், சமீபத்தில் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்களை ஏற்கனவே பணியாற்றிய இடங்களுக்கு அரசு மாற்றி உள்ளது. 2-ம் நிலை தாசில்தாராக இருந்த அருண் ஸ்ரீகண்டா கடந்த 24-ந் தேதி கோகாக் தாலுகா அலுவலகத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதனை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

2-வது பட்டியல் தயார்

தாசில்தார்கள் இடமாற்ற விவகாரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்துவதற்காக, இந்த இடமாற்ற உத்தரவு நடவடிக்கையை முதல்-மந்திரி சித்தராமையா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்னும் சில தாசில்தார்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சித்தராமையாவிடம், எம்.எல்.ஏ.க்கள் கூறி இருந்தனர்.

இதையடுத்து, 2-வது கட்டமாக தாசில்தார்கள் மற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அதற்கான பட்டியல் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்