சாப்பாடு டேஸ்ட்டாவே இல்ல.. சண்டையில் தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்
|தாயை கொலை செய்த மகன், தற்கொலை செய்யும் முயற்சியாக தூக்க மாத்திரைகளை அதிக அளவில் தின்றுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், முர்பாத் தாலுகாவில் உள்ள வேலு கிராமத்தில் 55 வயது பெண், தன் மகனுடன் வசித்து வந்தார். அவர்கள் இருவருக்குமிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. தாய் வழங்கிய உணவு சுவையாக இல்லை என்று மகன் கூற, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடும் கோபமடைந்த மகன், அரிவாளால் தாயின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அருகில் வசிப்பவர்கள், தானே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தாயை கொலை செய்த மகன், தற்கொலை செய்யும் முயற்சியாக தூக்க மாத்திரைகளை அதிக அளவில் தின்றுள்ளார். உடலநலம் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபர் மருத்துவமனையில் இருப்பதால் அவரை இன்னும் கைது செய்யவில்லை என போலீசார் தெரிவித்தனர்.