< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க.வில் சேர்ந்ததற்காக பழங்குடி பெண்களுக்கு தண்டால் எடுக்கும் தண்டனை; திரிணாமுல் காங்கிரஸ் அராஜகம்
தேசிய செய்திகள்

பா.ஜ.க.வில் சேர்ந்ததற்காக பழங்குடி பெண்களுக்கு தண்டால் எடுக்கும் தண்டனை; திரிணாமுல் காங்கிரஸ் அராஜகம்

தினத்தந்தி
|
8 April 2023 9:03 AM IST

பா.ஜ.க.வில் சேர்ந்ததற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வழங்கிய தண்டனையின்படி பழங்குடி பெண்கள் தண்டால் எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் ராமநவமியை முன்னிட்டு ஏற்பட்ட வன்முறையால், சட்டம் மற்றும் ஒழுங்கை அரசு முறையாக பாதுகாக்கவில்லை என பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறியது.

இந்நிலையில், அக்கட்சியை சேர்ந்த பழங்குடி பெண்கள் சிலர் பா.ஜ.க.வில் சேர்ந்தனர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண்களை அழைத்து கடுமையாக தண்டித்து உள்ளனர்.

இதுபற்றி பா.ஜ.க.வின் பலூர்காட் மக்களவை தொகுதி எம்.பி. மற்றும் அக்கட்சியின் மாநில தலைவர், சுகந்த மஜும்தார் தனது டுவிட்டரில் வீடியோவுடன் கூடிய பதிவொன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், தபன் நகரின் தபன் கோபாநகர் பகுதியை சேர்ந்த பழங்குடியினரான மார்டினா கிஸ்கு, ஷியூலி மார்டி, தக்ரான் சோரன் மற்றும் மாலதி முர்மு ஆகியோர் பா.ஜ.க.வில் நேற்று முன்தினம் சேர்ந்தனர்.

அந்த பெண்களை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் தங்களது கட்சியில் சேரும்படி கூறியுள்ளனர். பா.ஜ.க.வில் சேர்ந்ததற்காக அவர்களை தெருவில் தண்டால் எடுக்க வைத்து, கடுமையாக தண்டித்து உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் பழங்குடி மக்களை புண்படுத்தி உள்ளது. இது ஆணவத்தின் உச்சம். மிக அதிக கண்டனத்திற்குரிய ஒன்று. எங்களது தொண்டர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம். அவர்களை பாதுகாக்க ஒவ்வொரு விசயங்களையும் நாங்கள் மேற்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்