பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என மும்பை தாக்குதல் நினைவு தினத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் மராட்டிய மாநிலம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்புடன் பேசப்பட்டது.
இந்த நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மத்திய வெளிவிவகார மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கூறும்போது, மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினத்தில் அதில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வதில் உலக நாடுகள் இந்தியாவுடன் இன்று இணைந்துள்ளன.
பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த பயங்கரவாத செயல்களை திட்டமிட்டவர்கள் மற்றும் தாக்குதலை மேற்பார்வை செய்தவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு இலக்காகி பாதிக்கப்பட்ட உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கைம்மாறாக இதனை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.