உத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை.!
|உத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
லக்னோ,
நிலத்தகராறு
உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் பதேபூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் யாதவ் (வயது 50). மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் ஆவார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சத்யபிரகாஷ் துபே (54). இவருக்கும், பிரேம் யாதவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று காலை, நிலத்தகராறு தொடர்பாக பேசுவதற்கு சத்யபிரகாஷ் துபே வீட்டுக்கு பிரேம் யாதவ் சென்றார். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
6 பேர் கொலை
தகராறு முற்றிய நிலையில், பிரேம் யாதவை சத்யபிரகாஷ் துபேவும், அவருடைய குடும்பத்தினரும் கூரிய ஆயுதங்களால் தாக்கினர். இதில், பிரேம் யாதவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த கொலை பற்றி தெரிய வந்தவுடன், அபைபூர் பகுதியை சேர்ந்த பிரேம் யாதவ் ஆதரவாளர்கள், சத்யபிரகாஷ் துபேவின் வீட்டுக்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர். துபே மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், சத்யபிரகாஷ் துபே, அவருடைய மனைவி கிரண் துபே (52), மகள்கள் சலோனி (18), நந்தினி (10), மகன் காந்தி (15) ஆகியோர் கொல்லப்பட்டனர். சத்யபிரகாஷ் துபேவின் மற்றொரு மகன் அன்மோல், படுகாயங்களுடன் கோரக்பூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
2 பேர் கைது
அடுத்தடுத்து நடந்த 6 பேர் படுகொலையால், பதேபூர் கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது. மாவட்ட கலெக்டர் அகண்ட் பிரதாப்சிங், போலீஸ் சூப்பிரண்டு சங்கல்ப் சர்மா ஆகியோர், கிராமத்துக்கு நேரில் சென்றனர்.
இந்த கொலைகள் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிராமத்தில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
யோகி ஆதித்யநாத் உத்தரவு
மேலும், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டுக்கும், ஐ.ஜி.க்கும் உத்தரவிட்டார். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.