செருப்பு குடோனில் பயங்கர தீ; ரூ.5 கோடி பொருட்கள் நாசம்
|பெங்களூருவில் செருப்பு குடோனில் தீப்பிடித்து ரூ.5 கோடி செருப்புகள், ஷூக்கள் எரிந்து நாசமானது. லாரி மோதியதில் மின்கம்பம் சாய்ந்து குடோனில் விழுந்ததால் இந்த விபரீதம் நடந்திருந்தது.
பெங்களூரு:
பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபெலே அருகே பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பணிமனையையொட்டி ஒரு குடோன் உள்ளது. அங்கு ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான செருப்புகள் மற்றும் ஷூக்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பணிமனை அருகே ஒரு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
லாரி மோதிய வேகத்தில் மின்கம்பம் முறிந்ததுடன், செருப்பு குடோன் மீது சாய்ந்து விழுந்தது. அப்போது மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பிடித்து, அந்த தீ அங்கிருந்த செருப்புகள், ஷூக்களில் பிடித்து எரிந்தது. மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. மேலும் கரும்புகையும் வெளியேறியது.
இதனால் அங்கிருந்த மக்கள், ஊழியர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் 12 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. குடோனில் இருந்த கரும்புகை வெளியேறிய வண்ணம் இருந்ததால், 3 மணிநேரத்திற்கும் மேலாக போராடி குடோனில் பிடித்த தீயை, வீரர்கள் அணைத்தார்கள். இதில் குடோனில் இருந்த செருப்புகள், ஷூக்கள் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருப்பதாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மின்கம்பத்தில் லாரி மோதியதில், அந்த கம்பம் முறிந்து குடோனில் விழுந்ததால் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்துள்ளது. குடோனில் ஊழியர்கள் யாரும் இல்லாதததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.