விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து.. 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்
|நேற்று நள்ளிரவு துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு படகில் இருந்து பரவிய தீ, அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கு பரவி பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவலறிந்து 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், துறைமுக அதிகாரிகள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். படகில் வைத்திருந்த எல்பிஜி சிலிண்டர்கள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேலான படகுகள் எரிந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.