< Back
தேசிய செய்திகள்
மேற்கு ஆசியாவில் பதற்றம்; ஈரான் வான்வெளியை தவிர்த்தது ஏர் இந்தியா
தேசிய செய்திகள்

மேற்கு ஆசியாவில் பதற்றம்; ஈரான் வான்வெளியை தவிர்த்தது ஏர் இந்தியா

தினத்தந்தி
|
13 April 2024 11:36 AM IST

ஈரான் வான்வெளியை தவிர்ப்பதற்காக ஏர் இந்தியா விமானங்கள் நீண்ட தொலைவை கடந்து செல்ல உள்ளன என விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரகம் ஒன்று உள்ளது. இதன் மீது, இஸ்ரேல் கடந்த வாரம் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈரானின் ஆயுத படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சி காவல் படையை சேர்ந்தவர்கள் மரணம் அடைந்தனர்.

இதில், படையின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜகேடி மற்றும் மற்றொரு உயரதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹதி ஹாஜி ரகீமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இதனை ஈரான் அரசும் உறுதி செய்தது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசும் உறுதி பூண்டுள்ளது.

இஸ்ரேலுக்குள் ராணுவம் அல்லது நுண்ணறிவு இலக்குகளை நோக்கி எந்த தாக்குதலும் நடத்தப்பட கூடும் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. எதிரியான இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் தெரிவித்தபோதும், எப்போது தாக்குதல் நடத்தப்படும்? என்ற விவரம் தெரிய வரவில்லை.

இந்த தாக்குதலை, நேரடியாகவோ அல்லது லெபனானில் பதுங்கி உள்ள ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுக்களை கொண்டு தாக்குதல் நடத்துமா? என்ற விவரம் எதுவும் வெளிவரவில்லை. ஹிஜ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவும், சந்தேகமேயின்றி ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. ஆனால், இந்த விசயத்தில் எங்களுடைய குழு தலையிடாது என கூறினார்.

இதனை முன்னிட்டு, இந்தியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் அமெரிக்காவும், இஸ்ரேல் நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கான புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

போர் பதற்றம் சூழ்ந்துள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய குடிமக்களை அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்த நிலையில், ஈரான் வான்வெளியை தவிர்ப்பதற்காக ஏர் இந்தியா விமானங்கள் நீண்ட தொலைவை கடந்து செல்ல உள்ளன என விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்