< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்:  முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோப்பு படம் (பிடிஐ)

தேசிய செய்திகள்

மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்: முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தினத்தந்தி
|
20 Jan 2024 3:50 PM IST

மணிப்பூரில் குக்கி பயங்கரவாதிகளால் தன்னார்வலர் மனோரஞ்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இம்பால்,

மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களுக்கு இடையிலான வன்முறைப் போராட்டம், பல மாதங்களைக் கடந்தும் நீடித்துவருகிறது. குக்கி இனப் பெண்கள் கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உலகம் முழுவதையும் அதிர வைத்தது. இந்த சம்பவங்களால் மணிப்பூரில் ஒரு வித பதற்றமான சூழலே நிலவி வருகிறது. பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு நிலமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது அங்கு வெடிக்கும் வன்முறையால் கடந்த சில மாதங்களாகவே அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர், மலைப்பகுதியில் இருந்து அதன் கீழ் உள்ள பகுதிக்குள் வசிப்பவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதற்கு தாழ்வான பகுதியில் உள்ள கிராம தன்னார்வலர்களும் பதிலடி கொடுத்தனர்.

இந்த மோதலில் கிராம தன்னார்வலர் மனோரஞ்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குக்கி பயங்கரவாதிகளால் மனோரஞ்சன் சிங் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்