பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் சதியா? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
|குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு நகருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறையினர் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள். மத்திய அரசின் இந்த எச்சரிக்கை காரணமாக பெங்களூருவில் எப்போதும் போலீசார் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.
தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரு நகரில் அடிக்கடி சோதனை நடத்தி, ஆங்காங்கே பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை கைது செய்தும் வருகிறார்கள். இத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், பெங்களூரு நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளியில் 'ராமேஸ்வரம் கபே' என்ற பெயரில் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. ராஜாஜிநகர் உள்பட பல பகுதிகளில் அந்த ஓட்டலின் கிளைகள் உள்ளன. இந்த ஓட்டலின் நிர்வாக இயக்குனராக திவ்யா என்பவர் இருந்து வருகிறார். இந்த ஓட்டலில் வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.
குந்தலஹள்ளியில் உள்ள அந்த ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். ஊழியர்களும், வாடிக்கையாளர்களுக்கு உணவு வினியோகம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், மதியம் 1 மணி 5 நிமிடத்தில் ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் டமார்... டமார்... என 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.
இதனால் ஓட்டல் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. ஓட்டலில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சிதறின.
ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள், குண்டுகள் வெடித்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், சுதாரித்துக்கொண்ட அவர்கள், தாங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்த உணவுப்பொருட்களை அப்படியே போட்டுவிட்டு, பதறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.
குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் ஓட்டலுக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காயம் அடைந்த 9 பேரையும் மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர்.
இதில் 4 பேருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டு இருந்ததால், அவர்களுக்கு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மற்ற 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர்கள் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பெண் ஒருவர் 40 சதவீத தீக்காயம் அடைந்துள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி அறிந்ததும் ஒயிட்பீல்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சிவக்குமார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
அப்போது ஓட்டலில் வாடிக்கையாளர்கள் கை கழுவும் பகுதியில் தான் அந்த குண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. முதலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில், கை கழுவும் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ஒரு பையில் வைத்திருந்த வெடிகுண்டுகள் தான் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கை கழுவும் பகுதியில் ஒரு குப்பை தொட்டியும், அந்த பையும் மட்டுமே இருந்தது. அந்த பையில் பேட்டரி, இரும்பு போல்டு, ஒரு அடையாள அட்டை ஆகியவையும் போலீசாரிடம் சிக்கியது. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து, அந்த ஓட்டலுக்கு மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
சம்பவம் நடந்த ஓட்டலுக்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. அத்துடன் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள், ஆங்காங்கே கிடந்த, வெடிகுண்டு சிதறல்கள் மற்றும் பையில் இருந்த பேட்டரி உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பரிசோதனை நடத்தினார்கள்.
பின்னர் இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன், "பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் மதியம் 1 மணியளவில் வெடிகுண்டு வெடித்து சிதறி இருக்கிறது. அது எந்த மாதிரியானது என்பது குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி தான் எந்த மாதிரியான வெடிப்பொருள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரியவரும். தற்போது அதுபற்றி விசாரணை நடந்து வருவதால், வேறு எதுவும் கூற முடியாது.
இந்த சம்பவத்தில் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று அவர் கூறினார்.
அத்துடன் ஓட்டலில் உள்ள கியாஸ் சிலிண்டர், கொதிகலன் எதுவும் வெடிக்கவில்லை என்பதையும், கியாஸ் சிலிண்டருடன் இணைக்கப்பட்டுள்ள குழாய்களில் எந்த கசிவும் ஏற்படவில்லை என்பதையும் தீயணைப்பு படைவீரர்கள் உறுதி செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் கபே ஓட்டலுக்கு பெங்களூருவில் பல பகுதிகளில் கிளைகள் உள்ளன. அந்த ஓட்டலில் வியாபாரம் சிறப்பாக நடந்து வருவதால், தொழில் போட்டி காரணமாக யாராவது வெடிகுண்டை வைத்து வெடிக்க செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பெங்களூருவை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வெடிக்க செய்து நாசவேலையில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஒயிட்பீல்டு மண்டல போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓட்டலுக்கு நேற்று வந்து சென்றவர்கள் யார்?-யார்? என்பதை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறிய சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.