விநாயகர் சிலைகளை கரைக்க சிக்கமகளூருவில் தற்காலிக குளம் அமைப்பு
|விநாயகர் சிலைகளை கரைக்க சிக்கமகளூருவில் தற்காலிக குளம் அமைக்க நகரசபை ஏற்பாடு செய்துள்ளது.
சிக்கமகளூரு-
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்றுமுன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதேப்போல் கர்நாடகத்திலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தநிலையில் வருகிற 28-ந் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கிறது.
ஆண்டுதோறும் சிக்கமகளூருவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி சிலைகளை பசவனஹள்ளி குளத்தில் பக்தர்கள் கரைத்து வந்தனர்.
இந்தநிலையில் தற்போது அந்த குளத்தில் தண்ணீர் இல்லை. மேலும் குளத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இந்த ஆண்டு பேலூர் ரோட்டில் உள்ள கோட்டை குளத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க நகரசபை சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கோட்டை குளத்தின் கரையோரம் தற்காலிக குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிக்கமகளூரு பகுதியில் இருந்து கொண்டு வரும் விநாயகர் சிலைகளை இந்த தற்காலிக குளத்தில் கரைக்க வேண்டும் என நகரசபை தெரிவித்துள்ளது.
மேலும் சிலைகளை கரைக்க வருபவர்கள் கவனமுடன் வர வேண்டும். ஊர்வலத்தில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது.
பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என நகரசபை தலைவர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.