< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் ஓடும் பஸ்சில் இளம்பெண்னுக்கு பாலியல் தொல்லை - நகைச்சுவை நடிகர் கைது
தேசிய செய்திகள்

கேரளாவில் ஓடும் பஸ்சில் இளம்பெண்னுக்கு பாலியல் தொல்லை - நகைச்சுவை நடிகர் கைது

தினத்தந்தி
|
12 Oct 2023 9:45 PM IST

கேரளாவில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நகைச்சுவை நடிகரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள நிலமேல் பகுதியை சேர்ந்தவர் பினு கமால் (வயது 45). நகைச்சுவை நடிகரான இவர் ஏராளமான டி.வி. நிகழ்ச்சிகளிலும், சில மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை பினு கமால் திருவனந்தபுரத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நிலமேலுக்கு கேரள அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றார். அவரது இருக்கைக்கு அருகில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார்.

திருவனந்தபுரம் அருகே வட்டப்பாறை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது நடிகர் பினு கமால் அருகில் அமர்ந்திருந்த இளம்பெண்னுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதையடுத்து நடிகர் பினு கமால் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். அதைப் பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அவரை விரட்டி சென்றனர்.

அப்போது வட்டப்பாறை போலீசாரும் அங்கு வந்தனர். அவர்களும் பொதுமக்களுடன் சேர்ந்து பினு கமாலை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்குப் பிறகு நடிகர் பினு கமால் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்