< Back
தேசிய செய்திகள்
தமிழக அரசை பின்பற்றி தெலுங்கானாவிலும் காலை உணவு திட்டம் அறிமுகம்..!
தேசிய செய்திகள்

தமிழக அரசை பின்பற்றி தெலுங்கானாவிலும் காலை உணவு திட்டம் அறிமுகம்..!

தினத்தந்தி
|
15 Sept 2023 10:55 PM IST

தமிழக அரசை பின்பற்றி தெலுங்கானாவிலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வரும் அக்.2-ம் தேதி முதல் செயல்படுத்த அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஐதராபாத்,

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்று பெயரிட்டு அதை சட்டசபையில் 7.5.22 அன்று 110-ம் விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். முதலில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் தொடங்கப்படும். பின்னர் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

அதன்படி கடந்தாண்டு செப். மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு முழுக்க இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் இது விரிவுபடுத்தப்பட்டது. அப்போதே இந்தத் திட்டத்திற்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது. இந்தநிலையில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்தை திருக்குவளையில் ஆகஸ்ட் 25 -ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில், நாடு முழுக்க இருந்தும் பலரும் இத்திட்டத்தை வரவேற்றனர். இதற்கிடையே இத்திட்டம் குறித்துத் தெரிந்து கொள்ளத் தெலுங்கானா அரசு அதிகாரிகளும் கூட சமீபத்தில் சென்னை வந்தனர். தமிழ்நாட்டில் அமல்படுத்தும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து அவர்கள் தெரிந்து கொண்டனர்.

இதற்கிடையே தெலுங்கானாவிலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதாகத் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 24 முதல் சத்தான காலை உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குத் தசரா பரிசாக இந்த "முதலமைச்சரின் காலை உணவு" திட்டத்தைக் கொண்டு வருவதாக அம்மாநிலத்தை ஆளும் கேசிஆர் கட்சியினர் கூறுகின்றனர். இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.400 கோடியைத் தெலுங்கானா அரசு செலவிட உள்ளது. இது குறித்த அரசாணையைத் தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது.

தெலுங்கானாவில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள், சத்தான காலை உணவைப் பெறுவதை இந்தத் திட்டம் உறுதி செய்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் மேம்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்