< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானா:  ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் மந்திரி
தேசிய செய்திகள்

தெலுங்கானா: ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் மந்திரி

தினத்தந்தி
|
31 Oct 2023 3:40 PM IST

தெலுங்கானாவில் ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியில், காங்கிரஸ் முன்னாள் மந்திரி நகம் ஜனார்த்தன ரெட்டி இன்று சேர்ந்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.300 கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள பணம் மற்றும் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, ஆளும் தெலுங்கானா பாரதீய ராஷ்டீரிய சமிதி (பி.ஆர்.எஸ்.), பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியில், தெலுங்கானாவின் முன்னாள் மந்திரி நகம் ஜனார்த்தன ரெட்டி இன்று சேர்ந்துள்ளார். அவருடைய ஆதரவாளர்கள் பலரும் அக்கட்சியில் சேர்ந்துள்ளனர்.

இதேபோன்று முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணு வர்தன் ரெட்டியும் அக்கட்சியில் இன்று இணைந்துள்ளார். வரவிருக்கிற தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட தொகுதி வழங்கப்படாத நிலையில், விஷ்ணு வர்தன் ரெட்டி இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என நான் கற்பனை கூட செய்யவில்லை. காந்தி பவனை அவர்கள் விரைவில் விற்க வேண்டியிருக்கும். நாங்கள் (ரெட்டி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள்) விரைவில் பி.ஆர்.எஸ். கட்சியில் சேருவோம் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து, மாநில மந்திரி ஹரீஷ் ராவ் மற்றும் கட்சியின் பிற தலைவர்கள், ஜுபிளி ஹில்சில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தனர். இதனால், அவர்கள் ஆளும் கட்சியில் சேருவது உறுதியானது. இந்நிலையில், ஐதராபாத் நகரில் உள்ள தெலுங்கானா பவனில், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் முன்னிலையில், அவர்கள் கட்சியில் இன்று இணைந்தனர்.

மேலும் செய்திகள்