தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் கைது - மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு
|தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சி தலைவர் நள்ளிரவில் அவரது மாமியார் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார். அவர் கரீம்நகர் மக்களவை தொகுதி எம்.பி.யாகவும் இருக்கிறார்.
பண்டி சஞ்சய் குமாரின் மாமியார் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது 9-ம் நாள் நிகழ்ச்சிக்காக பண்டி சஞ்சய்குமார், கரீம்நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கிருந்த அவரை நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென போலீசார் கைது செய்தனர். போலீஸ் உதவி கமிஷனர் துலா சீனிவாஸ் தலைமையிலான தனிப்படை, வீடு புகுந்து கைது செய்தது.
கைது செய்வதற்கான காரணம் கேட்டு, போலீசாருடன் பண்டி சஞ்சய்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், போலீசார் காரணம் சொல்லவில்லை. போலீஸ் நிலையத்தில் வைத்து சொல்வதாகவும், கைது செய்ய தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் துலா சீனிவாஸ் தெரிவித்தார்.
தகவல் அறிந்து வந்த எம்.பி.யின் ஆதரவாளர்கள், கைது செய்வதை தடுக்க போராடினர். அதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. எம்.பி.யை வலுக்கட்டாயமாக போலீசார் கூட்டிச் சென்றனர். அவரை ஐதராபாத்தில் உள்ள பொம்மலராமாராம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
நேற்று காலையில் அந்த போலீஸ் நிலையத்தை பா.ஜ.க. தொண்டர்கள் முற்றுகையிட்டனர். பண்டி சஞ்சய்குமாரை விடுதலை செய்யக்கோரி கோஷமிட்டனர். முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மாநில பா.ஜனதா தலைவர் கைது குறித்து விசாரிப்பதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரகுநந்தன் ராவ், போலீஸ் நிலையத்துக்கு வந்தார். ஆனால் அவரிடம் போலீசார் காரணத்தை சொல்ல மறுத்தனர். அதனால் அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரையும் போலீசார் காவலில் வைத்தனர். போலீசாருக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய்குமார் கைதை எதிர்த்து பா.ஜனதா தொண்டர்கள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தர்ணா போராட்டத்திலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது 'டுவிட்டர்' பதிவில், 10-ம் வகுப்பு தேர்வு கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில் தொடர்பு என்ற பொய் வழக்கில் பண்டி சஞ்சய்குமார் கைது செய்யப்பட்டதாகவும், இது சந்திரசேகர ராவுக்கு நல்லதில்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, 10-ம் வகுப்பு இந்தி தேர்வு கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில் பண்டி சஞ்சய்குமார் கைது செய்யப்பட்டதாக நேற்று பிற்பகலில் போலீசார் தெரிவித்தனர். கரீம்நகர்-2 போலீஸ் நிலையத்திலும், கமலாபூர் போலீஸ் நிலையத்திலும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவற்றில், மாநிலத்தின் அமைதி, பாதுகாப்பை சீர்குலைக்கும்வகையில் பண்டி சஞ்சய்குமார் நடந்து கொண்டதாகவும், தேர்வு மையங்கள் அருகே போராட்டம் நடத்துமாறு கட்சியினரை தூண்டி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு பாதிக்கப்படக்கூடாது என்பதற்கான தடுப்பு நடவடிக்கையாக எம்.பி. கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.