காவி உடையில் வந்த மாணவர்கள்...விளக்கம் கேட்ட ஆசிரியர் - பள்ளி மீது மர்ம கும்பல் தாக்குதல்
|காவி உடையில் வந்த மாணவர்களை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதால் மர்ம கும்பல் பள்ளி வளாகத்தை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிக்கு கடந்த 2 நாள்களுக்கு முன்பு, சில மாணவர்கள் காவி நிற உடை அணிந்து வந்துள்ளனர். அவர்களை கண்ட பள்ளியின் முதல்வர் ஜெய்மோன் ஜோசப், அது குறித்து விசாரித்துள்ளார். இதற்கு மாணவர்கள் 21 நாள் ஹனுமன் தீட்சை விரதம் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பள்ளி முதல்வர் மாணவர்களை தங்களது பெற்றோர்களை அழைத்து வரும்படி கூறியுள்ளார். பின்னர் அவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் பள்ளி முதல்வர் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவின.
இந்நிலையில், சிறிது நேரத்தில் பள்ளிக்கு காவி நிற உடையில் வந்த மர்ம கும்பல் திடீரென பள்ளியில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. அந்த வீடியோவில் அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டவாறு பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பள்ளி வளாகத்தில் இருந்த அன்னை தெரசாவின் சிலை மீது கற்களை வீசி தாக்கினர். சில நபர்கள் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து, அவரை தாக்கி, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகம் வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அப்பள்ளி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த கும்பல் வலியுறுத்தியுள்ளனர்.