துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளருக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு
|ஜெகதீப் தன்கரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.
புதுடெல்லி,
வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவதால், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கியுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஜெகதீப் தன்கரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில், தெலுங்கானா மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற கட்சித்தலைவர் கேசவ் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சிக்கு மக்களவையில் 9 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 7 எம்.பி.க்களும் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலிலும் இந்தக் கட்சி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நின்ற யஷ்வந்த் சின்காவை ஆதரித்தது நினைவு கூரத்தக்கது.