தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பிறந்தநாள்: பிரதமர், ஜனாதிபதி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!
|தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
புதுச்சேரி துணை நிலை கவர்னரும், தெலங்கானா மாநில கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று 62-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தில், தமிழிசை சவுந்தரராஜனின் பரந்த பொது வாழ்க்கை அனுபவம் அரசாங்கத்தின் சொத்து என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருக்கு நீண்ட ஆயுளைத் தந்து, தேச சேவையில் எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.
வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு, கவர்னர் தமிழிசை நன்றி கூறியுள்ளார். 'உங்கள் வாழ்த்து செய்தியானது, வளமான எதிர்கால இந்தியாவுக்காக உங்கள் தொலைநோக்கு நடவடிக்கைகளில் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்ப்பணிப்பதற்கு என்னை ஊக்குவிக்கிறது. தேசத்திற்கான உங்களின் 24 மணி நேர சேவை எனக்கு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 'மாண்புமிகு ஜனாதிபதி அவர்களிடமிருந்து இன்று காலை தொலைபேசி அழைப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி மற்றும் எனது பிறந்தநாளுக்கு அவரது அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி' என்று டுவிட்டரில் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய தங்கையுமான திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.
வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன், 'மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அன்புச்சகோதரர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "தெலுங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நமது தேசத்தின் சேவையில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்தியுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, 'மேதகு தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர்(கூடுதல் பொறுப்பு) டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், அன்பு சகோதரி மேதகு தமிழிசை அவர்களின் பொதுவாழ்வு சிறந்து பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று வாழ்த்தியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 'தனது 62வது அகவையில் அடியெடுத்து வைக்கும் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான மருத்துவர் தமிழிசை அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்நன்னாளில் அவர் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்!' என்று கூறியுள்ளார்.