< Back
தேசிய செய்திகள்
தனிமாநிலமாக உருவாக காரணமாக இருந்தவரை தோற்கடித்த தெலுங்கானா மக்கள்: காரணம் என்ன?
தேசிய செய்திகள்

தனிமாநிலமாக உருவாக காரணமாக இருந்தவரை தோற்கடித்த தெலுங்கானா மக்கள்: காரணம் என்ன?

தினத்தந்தி
|
3 Dec 2023 5:28 PM IST

தெலுங்கானா தனிமாநிலமாக உருவாக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து அதில் வெற்றியும் பெற்றவர் சந்திரசேகர் ராவ்.

ஐதராபாத்,

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 4 மணி நிலவரப்படி காங்கிரஸ் -65, பிஆர்எஸ் 37, பாஜக - 10, பிற -7 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலமாக தெலுங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸ் கால்பதிக்கிறது.

இந்தநிலையில், தெலுங்கானா தனிமாநிலமாக உருவாக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து அதில் வெற்றியும் பெற்றவர் சந்திரசேகர் ராவ். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியது. காங்கிரஸ் போட்ட கணக்கு வேறு, தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கி கொடுத்தால் அம்மாநில மக்கள் நமக்குதான் ஓட்டளிப்பார்கள் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் நடந்தது வேறு.

தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்தனர். அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. ஆனால் இந்த தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. தனிமாநிலமாக உருவாக காரணமாக இருந்தவரை மக்கள் அகற்ற சில காரணங்கள் கூறப்படுகின்றன.

சந்திரசேகர் ராவ் கட்சியினர் மீது நிறைய ஊழல் புகார்கள் இருக்கின்றன. மேலும் அவரது மகனும், மகளும் கட்சியில் தனி அதிகார மையமாக வலம் வருகின்றனர். அக்கட்சியும் குடும்ப கட்சியாக மாறி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளது. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து சந்திரசேகர் ராவ் கட்சியை கவிழ்த்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்