தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி: காங்கிரஸ் அறிவிப்பு
|தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக ரேவந்த் ரெட்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் உதயமானது முதல், அங்கு பி.ஆர்.எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் 2 முறை முதல்வராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து தெலங்கானாவின் 3-வது சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்றது. காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 7 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் தான் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக ரேவந்த் ரெட்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி டிசம்பர் 7-ந் தேதி (நாளை மறுநாள்) பதவியேற்க உள்ளார் என்றார்.