திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென கீழே விழுந்து மரணம்..!
|தெலுங்கானாவில் கடந்த ஒரு வாரத்தில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் 19 வயது இளைஞர் ஒருவர், தனது உறவினரின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். ஐதராபாத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டம் பார்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மராட்டியத்தை சேர்ந்த அந்த இளைஞர், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அப்போது, சில நொடிகளில், அவர் திடீரென நிலைதடுமாறி தரையில் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் கடந்த ஒரு வாரத்தில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மது அருந்துதல், புகைபிடித்தல், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் இளைஞர்களிடையே திடீர் மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், சிலருக்கு இதுபோன்ற ஆபத்து காரணிகள் எதுவும் இல்லை.
இளம் வயதினருக்கு இதயப் பிரச்சினைகளுக்கான பிற பொதுவான காரணங்கள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ காரணங்கள், வாழ்க்கை முறை சிக்கல்கள், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை அடங்கும்.