< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானா சட்டசபை தேர்தல்; ஜனநாயக கடமையாற்றிய நடிகர் அல்லு அர்ஜுன்
தேசிய செய்திகள்

தெலுங்கானா சட்டசபை தேர்தல்; ஜனநாயக கடமையாற்றிய நடிகர் அல்லு அர்ஜுன்

தினத்தந்தி
|
30 Nov 2023 9:18 AM IST

புஷ்பா தி ரைஸ் பாகம் ஒன்றில் நடித்ததற்காக, சமீபத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

ஐதராபாத்,

தெலுங்கானா சட்டசபை தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஆளுங்கட்சியான பி.ஆா்.எஸ். கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. கவிதா, மத்திய மந்திரி மற்றும் தெலுங்கானா பா.ஜ.க. தலைவரான கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் காலையிலேயே வந்து வாக்கு பதிவு செய்தனர்.

இதேபோன்று, நடிகர் அல்லு அர்ஜுன், ஐதராபாத்தின் ஜுபிளி பகுதியில் பி.எஸ்.என்.எல். மையத்தில் அமைக்கப்பட்ட 153-ம் எண் கொண்ட வாக்கு சாவடிக்கு சென்றார். பொதுமக்களுடன் வரிசையில் நின்றார். அவரை அடையாளம் கண்டு கொண்ட மக்கள் புன்னகையுடன் வரவேற்றனர். இதன்பின் அவருடைய வாக்கை செலுத்தினார். நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர்., கிரிக்கெட் வீரர் அசாருதீன் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்டில் வெளிவர திட்டமிடப்பட்டு உள்ளது. புஷ்பா தி ரைஸ் பாகம் ஒன்றில் நடித்ததற்காக, சமீபத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில், முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.), பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதுதவிர, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியை சந்திக்கின்றன.

இதில், நக்சலைட்டுகள் பாதிப்பு காணப்படும் 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

இந்த தோ்தலில் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவர்களில் 221 பேர் பெண்கள். திருநங்கை ஒருவரும் போட்டியிடுகிறார். மொத்தமுள்ள 35,655 வாக்கு மையங்களில், 3.17 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ந்தேதி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்