< Back
தேசிய செய்திகள்
இலகுரக தேஜஸ் போர் விமானம், விமானப்படையிடம் ஒப்படைப்பு
தேசிய செய்திகள்

இலகுரக தேஜஸ் போர் விமானம், விமானப்படையிடம் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
5 Oct 2023 2:35 AM IST

பெங்களூரு எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்த முதல் இலகுரக தேஜஸ் போர் விமானம், விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்த முதல் இலகுரக தேஜஸ் போர் விமானம், விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலகுரக தேஜஸ் போர் விமானம்

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம், விமானப்படையில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

மத்திய இணை மந்திரி

இதுதொடர்பான நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மத்திய ராணுவ இணை மந்திரி அஜய் பட், விமானப்படை முதன்மை ஏர்மார்ஷல் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, மத்திய மந்திரி அஜய்பட் புதிதாக தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் போர் விமானத்தை அறிமுகம் செய்தார்.

இதையடுத்து அவர் பேசுகையில், ராணுவ தளவாட கொள்முதலில் இலகுரக தேஜஸ் போர் விமானம் ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இது இந்தியாவின் திறனை வெளிப்படுத்தி உள்ளது. மேலும் நமது சுயசார்பு இந்தியா திட்டத்தில் இது ஒரு மைல்கல் ஆகும் என்றார்.

விமானப்படை முதன்மை ஏர்மார்ஷல் சவுத்ரி கூறுகையில், விமானப்படைக்கு கூடுதலாக 97 இலகுரக தேஜஸ் போர்விமானங்கள் வாங்கப்பட உள்ளது என்றார்.

பயிற்சி பெறுவது சுலபம்

இதுகுறித்து எச்.ஏ.எல். நிறுவனம் கூறுகையில், இலகுரக தேஜஸ் போர் விமானம் இரட்டை இருக்கை கொண்டது. இது அனைத்து காலநிலையிலும் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. போர் காலத்தில் இந்த விமானங்கள் சிறப்பாக செயல்படும். இந்த போர் விமானம் பயிற்சி பெறுபவர்களுக்கு சுலபமாக இருக்கும். இலகுரக விமானத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

வரும் நாட்களில் இந்தியாவின் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில் தேஜஸ் போர் விமானம் இடம்பெறும். இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி வருவாய் இலக்கை எட்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்