சமூக வலைதளம் மூலம் பழகிய இளம்பெண்ணை போதை மருந்து கொடுத்து கற்பழித்த வாலிபர்கள்
|ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம் பெண்ணை அழைத்து சென்ற அந்த வாலிபர்கள் அவருக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்தனர்.
புதுடெல்லி,
டெல்லியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவருக்கு சமூக வலைத்தளம் மூலம் 2 வாலிபர்கள் பழக்கமாகினர். சம்பவத்தன்று அந்த வாலிபர்கள் இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு டெல்லியின் மதங்கீர் பகுதியில் உள்ள முக்கிய சாலைக்கு வரும்படி கூறினர்.
அதன்படி அந்த பெண் நண்பர்களை சந்திப்பதற்காக அங்கு சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் இருவரும் தங்களுடன் மோட்டார் சைக்கிளில் வரும்படி இளம் பெண்ணை வற்புறுத்தினர். அதற்கு அவர் மறுக்கவே, மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வாலிபர்கள் மிரட்டினர். இதனால் பயந்துபோன அந்த பெண் அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றார்.
பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இளம் பெண்ணை அழைத்து சென்ற அந்த வாலிபர்கள் அவருக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்தனர். இதை அறியாமல் அந்த உணவை உண்ட இளம் பெண் மயங்கினார். பின்னர் வாலிபர்கள் இருவரும் அவரை கற்பழித்தனர். அதை தொடர்ந்து இளம் பெண்ணை அப்படியே விட்டுவிட்டு வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
மயக்கம் தெளிந்து சுயநினைவுக்கு திரும்பிய அந்த பெண் தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்து, கதறி துடித்தார். உடனடியாக அவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் இருந்த வாலிபர்கள் இருவரையும் கைது செய்தனர்.