குளியல் அறையில் விஷவாயு தாக்கி வாலிபர் சாவு
|குளியல் அறையில் விஷவாயு தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகாவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (வயது 24). இவர் நேற்று முன்தினம் சிக்கமகளூரு டவுன் உப்பள்ளியில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்த குளியல் அறையில் குளிக்க சென்றார். இதையடுத்து ஒரு மணி நேரமாகியும் இப்ராஹிம் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்து இப்ராஹிமின் அக்காள் கதவை தட்டி திறக்கும்படி கூறினார். உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அப்போது உள்ளே இப்ராஹிம் இறந்து கிடந்தார். மேலும் குளியல் அறையில் இருந்த வெந்நீர் எந்திரத்தில் விஷவாயு கசிந்து கொண்டிருந்தது. விஷவாயு தாக்கி இறந்ததை அறிந்த அவர்கள் உடனே இதுகுறித்து பசவனஹள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் வெந்நீர் எந்திரத்தில் இருந்து அதிகளவு விஷவாயு கசிந்திருப்பது தெரிந்தது. அந்த விஷவாயு அறை முழுவதும் பரவியதால், மூச்சுதிணறல் ஏற்பட்டு, இப்ராஹிம் இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பசவனஹள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.