< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில்  தாய்-தந்தையை கொன்ற வாலிபர் கைது
தேசிய செய்திகள்

பெங்களூருவில் தாய்-தந்தையை கொன்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
22 July 2023 6:45 PM GMT

தாய், தந்தையை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, குடகு மாவட்டத்தில் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு-

தாய், தந்தையை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, குடகு மாவட்டத்தில் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இரும்பு கம்பியால்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர்கள் பாஸ்கர்(வயது 61) மற்றும் சாந்தா(60). இந்த தம்பதிக்கு சச்சின் மற்றும் சரத் என்ற 2 மகன்கள் உள்ளனர். பாஸ்கர் தனது குடும்பத்துடன் பெங்களூரு பேடராயனபுரா பகுதியில் குடியேறினார். அந்த பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் காசாளராக அவர் வேலை செய்து வந்தார். அவரது மனைவி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் ஆவார். மூத்த மகன் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இளைய மகன் சரத் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சாதாரண பிரச்சினைக்காக சரத்துடன் அவரது பெற்றோர் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஆத்திரமடைந்த சரத், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தனது பெற்றோர் 2 பேரையும் சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சரத் கைது

இதுகுறித்து சச்சின், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கெடிகேஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பாஸ்கர் மற்றும் சாந்தா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான சரத்தை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சரத், குடகு மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் குடகிற்கு சென்றனர். மேலும் குடகு மாவட்டத்தில் பதுங்கி இருந்த சரத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தனது பெற்றோரை கொலை செய்துவிட்டு காரில் குடகிற்கு சென்றதும், 3 நாட்களாக அவர் காரிலே தங்கி இருந்ததும் தெரிந்தது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்