பெங்களூருவில் வாலிபர் கொடூர கொலை
|பெங்களூருவில் முன்விரோதத்தில் வாலிபரின் கையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
வாலிபர் கொலை
பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நைஸ் ரோடு, நெட்டகர பாளையாவில் நேற்று அதிகாலையில் ஒரு வாலிபர் கை துண்டிக்கப்பட்டும், முகம் சிதைந்த நிலையிலும் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தலகட்டபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. நள்ளிரவு 1 மணிக்கு மேல் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது நெட்டகர பாளையாவில் உள்ள நைஸ் ரோட்டுக்கு வாகனத்தில் அந்த வாலிபரை அழைத்து வந்ததும், அங்கு வைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கை துண்டிப்பு
வாலிபரின் கையை அரிவாளால் வெட்டி மர்மநபர்கள் துண்டித்து இருந்தனர். மேலும் முகத்திலும் ஆயுதங்களால் தாக்கி இருந்ததால், வாலிபர் யார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முன்விரோதம் அல்லது பழைய பகை காரணமாக வாலிபரை அவருக்கு தெரிந்த நபர்களே கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் கொலையாளிகள் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.
இதையடுத்து, நெட்டகர பாளையா, அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.