தொழில் நுட்பம் ஒருபோதும் புத்தகங்களுக்கு மாற்றாக இருக்காது: பிரதமர் மோடி பேச்சு
|தொழில் நுட்பம் ஒருபோதும் புத்தகங்களுக்கு மாற்றாக இருக்காது என பிரதமர் மோடி இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
புதுடெல்லி,
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நவபாரத் சாகித்ய மந்திர் சார்பில் புத்தக திருவிழா இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது, நம்முடைய கல்வி மற்றும் வழிபாட்டில் புத்தகம் மற்றும் மூலபாடம் ஆகியவை அடிப்படை விசயங்களாக உள்ளன.
இன்றைய இணையதள காலத்தில், ஏதேனும் தேவைப்பட்டால், நாம் இணையதள உதவியை எடுத்து கொள்வோம் என்ற நினைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நமக்கு தகவலுக்கான முக்கிய மூலம் தொழில்நுட்பம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், புத்தகங்களுக்கு அது ஒருபோதும் மாற்றாக முடியாது.
சுதந்திர போராட்டத்தில் மறந்து போன கதைகளை வெளிகொண்டு வரும் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் புத்தக திருவிழாக்களை நடத்துவது எப்போதும் அதற்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.