தொழில்நுட்ப கோளாறால் மங்களூருவில் இருந்து 13 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட துபாய் விமானம்
|தொழில்நுட்ப கோளாறால் மங்களூருவில் இருந்து 13 மணி நேரம் தாமதமாக துபாய் விமானம் புறப்பட்டு சென்றது. பயணிகள் விடிய, விடிய விமான நிலையத்தில் காத்து கிடந்தனர்.
மங்களூரு-
தொழில்நுட்ப கோளாறால் மங்களூருவில் இருந்து 13 மணி நேரம் தாமதமாக துபாய் விமானம் புறப்பட்டு சென்றது. பயணிகள் விடிய, விடிய விமான நிலையத்தில் காத்து கிடந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாயை நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் 161 பயணிகள் பயணிக்க இருந்தனர். இந்த நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது.
விடிய, விடிய...
பின்னர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாகவும், புறப்பட தாமதமாகும் என்றும் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் எவ்வளவு நேரம் தாமதமாகும் என்று தெரிவிக்கப்படவில்லை. மேலும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள், விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
ஆனால் பல மணி நேரம் ஆகியும் விமானம் புறப்படுவது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். ஆனாலும், சரியாக எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. இதனால், பயணிகள் விடிய, விடிய விமான நிலையத்தில் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
13 மணி நேரம் தாமதம்
விடிந்த பிறகும் விமான நிலைய அதிகாரிகள் சரியான தகவல் எதையும் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் அவர்கள் அதிகாரிகளை சூழ்ந்து தங்களை மாற்று விமானத்தில் அனுப்பி வைக்காமலும், தங்குவதற்கு இடம் வழங்காமலும் அலை கழிப்பதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று மதியம் 12.20 மணி அளவில் 155 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் துபாய் நோக்கி புறப்பட்டு சென்றது. இதில் 6 பயணிகள், ஏர் இந்தியா விமானத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டு வேறு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 13 மணி நேரம் தாமதமாக ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் முக்கிய வேலையாக சென்றவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.