காதல் விவகாரம்: பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை - சக ஆசிரியர் வெறிச்செயல்
|வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கோடா (ஜார்கண்ட்),
ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், தனது சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.
ராஞ்சியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள பொரையாகட் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோடா காவல் கண்காணிப்பாளர் நாது சிங் மீனா, "ஒரு பெண் உள்பட இரண்டு ஆசிரியர்களின் உடல்கள் பள்ளியில் உள்ள அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தன, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரும் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரவி ரஞ்சன் என்ற ஆசிரியர், "காதல் விவகாரம்" காரணமாக பெண் ஆசிரியர் உள்பட இரண்டு சக ஆசிரியர்களை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பின் அவர் தன்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பலத்த காயம் அடைந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால், அவர்கள் இருந்த அறைக்கு விரைந்தனர், ஆனால் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்ததால், அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து திறந்தனர். ஆனால் அதற்குள் இரு ஆசிரியர்களும் இறந்துவிட்டனர், அவர்கள் தலையில் சுடப்பட்டிருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தனது தலையின் வலது பக்கத்தில் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றிருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கோடா காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "முதன்மையாக, இது ஒரு காதல் விவகாரம்போல் தெரிகிறது. கிராமவாசிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் கொடுத்த தகவலின்படி, ஆண் ஆசிரியர்கள் இருவரும் பெண் ஆசிரியருடன் காதல் உறவில் இருந்தனர்" என்று அவர் கூறினார்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆனால் அதில் ஒரு துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் நாது சிங் மீனா தெரிவித்தார்.
படுகாயமடைந்த ஆசிரியர் ஆபத்தான நிலையில் கோடா சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.