< Back
தேசிய செய்திகள்
உ.பி.யை போன்று மற்றொரு சம்பவம்: வகுப்பறை போர்டில் மத வாசகம் எழுதிய மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்
தேசிய செய்திகள்

உ.பி.யை போன்று மற்றொரு சம்பவம்: வகுப்பறை போர்டில் மத வாசகம் எழுதிய மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்

தினத்தந்தி
|
27 Aug 2023 3:37 AM GMT

வகுப்பு போர்டில் மத ரீதியிலான வாசகம் எழுதிய மாணவனை ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

ஸ்ரீநகர்,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் படித்துவரும் 2ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் தவறாக கூறியுள்ளார். மேலும், வீட்டுப்பாடத்தை எழுதாமலும் வந்துள்ளார். அந்த மாணவன் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் ஆவார். வாய்ப்பாட்டை மாணவன் சரியாக கூறாததாலும், வீட்டுப்பாடம் எழுததாததாலும் ஆத்திரமடைந்த ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை அழைத்து வாய்ப்பாடு சரியாக கூறாத மாணவன் கன்னத்தில் அறையும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த மாணவனை சக மாணவர்கள் கன்னத்தில் அறைந்துள்ளனர். அப்போது, 'இஸ்லாமிய மத மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. இதனால், மாணவர்களின் படிப்பு பாழாகிறது' என்று ஆசிரியை திருப்தி தியாகி கூறினார்.

மேலும், மாணவனின் கன்னம் சிவந்து விட்டதால் அவரின் கையில் அடிக்கும்படி சக மாணவர்களிடம் ஆசிரியை திருப்தி தியாகி கூறினார். வகுப்பறையில் நடந்த இந்த நிகழ்வை இஸ்லாமிய மாணவனின் உறவினர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவனை மத ரீதியிலாக விமர்சித்து சக மாணவர்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஆசிரியை திருப்தி தியாகி மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை தான் ஒரு மாற்றுத்திறனாளி என்றும், தன்னால் எழுந்து நிற்க முடியாது என்பதால் வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவனை சக மாணவர்களை விட்டு கண்டித்ததாகவும் ஆசிரியையும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியையுமான திருப்தி தியாகி கூறினார்.

இது தொடர்பாக ஆசிரியை திருப்தி தியாகி கூறுகையில், வைரலாக்கப்பட்ட வீடியோ எடிட் மற்றும் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. இந்து - இஸ்லாம் என மத ரீதியில் பிரச்சினை ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. இந்து - இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக உள்ளனர். எங்கள் பள்ளியில் அதிக அளவில் இஸ்லாமிய மத மாணவர்கள் உள்ளனர். மாணவனிடம் கண்டிப்புடன் இருக்குமாறு மாணவனின் (இஸ்லாமிய மாணவன்) பெற்றோரிடமிருந்து எனக்கு அழுத்தம் வந்தது. நான் மாற்றுத்திறனாளி, என்னால் எழுந்து நிற்க முடியாது. அந்த மாணவன் கடந்த 2 மாதங்களாக வீட்டுப்பாடம் எழுதவில்லை. ஆகையால், 2 அல்லது 3 மாணவர்களை வைத்து அந்த மாணவனை அடிக்கமாறு கூறினேன். அப்போது தான் அந்த மாணவன் வீட்டுப்பாடம் எழுதத்தொடங்குவான். தேர்வுகள் நெருங்கி வருவதால் இஸ்லாமிய மத பெண்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டாம் என நான் கூறினேன். ஆனால், வீடியோவை எடிட் செய்து இஸ்லாமியர் என்ற வார்த்தையை எடுத்துள்ளனர். எனக்கு எந்த நோக்கமும் இல்லை. நான் தவறு செய்துவிட்டேன். அதற்காக கைகூப்பி மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

இந்நிலையில், உத்தரபிரதேச சம்பவம் போன்று ஜம்மு-காஷ்மீரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் கத்வா மாவட்டம் பெனி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியை சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில் உள்ள போர்டில் மத வாசகம் எழுதியுள்ளார். இந்து மதத்தை சேர்ந்த மாணவன் வகுப்பறை போர்டில் இந்து மத வாசகமான 'ஜெய் ஸ்ரீராம்' என எழுதியுள்ளான்.

இது குறித்து அறிந்த பள்ளி ஆசிரியர் பரூக் அகமது மற்றும் தலைமை ஆசிரியர் முகமது ஹபீஸ், மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆசிரியர், தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயமடைந்தான். மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை குல்தீப் சிங் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவனை தாக்கிய ஆசிரியர் பரூக் அகமதுவை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் முகமது ஹபீசை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்