பஞ்சாப்பில் பள்ளி வகுப்பறையில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ - ஆசிரியர் 'போக்சோ' சட்டத்தில் கைது
|பஞ்சாப்பில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தனது செல்போனை பயன்படுத்தி பாடம் நடத்தி கொண்டிருந்தபோது தவறுதலாக எல்.சி.டி. திரையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பானது.
கபுர்தலா,
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள கோபிந்த்புரா கிராமத்தில் அரசு பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு ராஜீவ் குமார் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ராஜீவ் குமார் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு எல்.சி.டி. திரையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அவர் தனது செல்போனை பயன்படுத்தி பாடம் நடத்தி கொண்டிருந்தபோது தவறுதலாக எல்.சி.டி. திரையில் ஆபாச வீடியோ ஒன்று ஒளிபரப்பானது.
இதனால் வகுப்பறையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜீவ் குமார் உடனடியாக அந்த வீடியோவை நிறுத்தினார்.
எனினும் இந்த சம்பவம் குறித்த செய்தி காட்டுத்தீ போல பரவியதை தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அருகில் போலீஸ் நிலையத்துக்கு சென்று, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து ராஜீவ் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.