ஆந்திராவில் தொடரும் வன்முறை: வீட்டுக்காவலில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள்
|வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
நகரி,
ஆந்திராவில் கடந்த 13-ந்தேதி நாடாளுமன்றத்தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் முடிவடைந்தது. ஆனால் அங்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது.
அன்னமய்யா மாவட்டம் ராயசோட்டியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளுக்குள் புகுந்து தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து உஷாரான போலீசார் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்து வருகிறார்கள்.
இதன்படி ராயசோட்டி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. வேட்பாளர் மண்டி பள்ளி ராம் பிரசாத் ரெட்டியை கைது செய்து போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். பல்நாடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கலவரங்களை கருத்தில் கொண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் வண்டாடி வெங்கடேஸ்வர்லு வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.
வன்முறை நடைபெற்ற பகுதிகளில் இயல்புநிலை திரும்பும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.தற்போது பல்நாடு மாவட்ட முக்கிய நகரங்களில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள் கூட கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அச்சப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.