< Back
தேசிய செய்திகள்
வாக்குகளை கவர முயற்சிப்பதா? பா.ஜனதா மீது மாயாவதி பாய்ச்சல்
தேசிய செய்திகள்

இலவச ரேஷன் திட்டத்தை காட்டி வாக்குகளை கவர முயற்சிப்பதா? பா.ஜனதா மீது மாயாவதி பாய்ச்சல்

தினத்தந்தி
|
16 May 2024 2:33 PM IST

இலவச ரேஷன் ஏழைகளுக்கு உதவவோ அல்லது அவர்களின் நிலையை மேம்படுத்தவோ போவதில்லை என்று மாயாவதி கூறியுள்ளார்.

லக்னோ,

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனுடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதனிடையே இலவச ரேசன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

பணவீக்கம், வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பின்தங்கிய நிலை ஆகியவற்றில் இருந்து நாட்டு மக்களை விடுவிப்பதற்கு பதிலாக, பா.ஜனதாவைச் சேர்ந்தவர்கள், தேர்தல் லாபத்திற்காக ஏழைகளுக்கு சிறிதளவு இலவச ரேஷன் வழங்குவதில் குறியாக இருக்கின்றனர். இதற்கு பெயர் கருணை அல்ல.

ஏழைகளுக்கு இலவச ரேஷன் என்பது பா.ஜனதாவோ, அரசோ செய்யும் சலுகை அல்ல. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து அது கொடுக்கப்படுகிறது. எனவே, ஏழைகளிடம் இலவச ரேஷனுக்கு பதிலாக வாக்குகளை கேட்டு அவர்களை கேலி செய்வது பொருத்தமற்றது. இலவச ரேஷன் ஏழைகளுக்கு உதவவோ அல்லது அவர்களின் நிலையை மேம்படுத்த போவதில்லை என்றார்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகும் 2029 வரை இத்திட்டம் தொடரும் என்றும் அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்