< Back
தேசிய செய்திகள்
தேர்தல் காரணமாக கெஜ்ரிவாலை குறிவைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது - பிரியங்கா காந்தி
தேசிய செய்திகள்

'தேர்தல் காரணமாக கெஜ்ரிவாலை குறிவைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது' - பிரியங்கா காந்தி

தினத்தந்தி
|
21 March 2024 11:16 PM IST

அரசியலின் தரத்தை தாழ்த்துவது பிரதமருக்கும், அவரது அரசுக்கும் பொருத்தமானது அல்ல என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.

இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், இன்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"தேர்தல் காரணமாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இவ்வாறு குறிவைப்பது முற்றிலும் தவறானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த வகையில் அரசியலின் தரத்தை தாழ்த்துவது பிரதமருக்கும், அவரது அரசுக்கும் பொருத்தமானது அல்ல.

உங்களை விமர்சிப்பவர்களுடன் தேர்தலில் மோதுங்கள், அவர்களை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள், அவர்களின் கொள்கைகள் மற்றும் பணிகள் குறித்து விமர்சனம் செய்யுங்கள் - இதுதான் ஜனநாயகம். ஆனால் இவ்வாறு விசாரணை அமைப்புகளின் அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவரது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதும், அழுத்தங்களை பிரயோகித்து பலவீனப்படுத்துவதும் ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது.

நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒரு முதல்-மந்திரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு முதல்-மந்திரியை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது போன்ற வெட்கக்கேடான காட்சி முதன்முறையாக காணப்படுகிறது."

இவ்வாறு பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்