கலவரத்தில் கைதான அப்பாவிகளை விடுதலை செய்யுமாறு கடிதம் எழுதினேன்; தன்வீர்சேட் எம்.எல்.ஏ. சொல்கிறார்
|போலீஸ் நிலையத்திற்கு தீவைத்தவர்களை விடுவிக்க சொல்லவில்லை என்றும், கைதான அப்பாவிகளை தான் விடுவிக்க கூறி கடிதம் எழுதினேன் என்று தன்வீர்சேட் எம்.எல்.ஏ. கூறினார்.
பெங்களூரு:
போலீஸ் நிலையத்திற்கு தீவைத்தவர்களை விடுவிக்க சொல்லவில்லை என்றும், கைதான அப்பாவிகளை தான் விடுவிக்க கூறி கடிதம் எழுதினேன் என்று தன்வீர்சேட் எம்.எல்.ஏ. கூறினார்.
தன்வீர்சேட் எம்.எல்.ஏ. பேட்டி
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி பகுதிகளில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி மைசூரு மாவட்டம் நரசிம்மராஜா தொகுதி எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தன்வீர்சேட் மாநில உள்துறை மந்திரி பரமேஸ்வருக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் தன்வீர்சேட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அப்பாவிகளை விடுவிக்கவே கடிதம் எழுதினேன்
நான் வகுப்புவாத செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி வன்முறை சம்பவத்தில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை விடுதலை செய்யதான் கடிதம் எழுதியுள்ளேன். கடிதம் எழுதியது உண்மை தான்.
பா.ஜனதா ஆட்சியில் இருந்த போதே நான் இந்த கருத்தை வலியுறுத்தி அப்போதைய அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது நான் டி.ஜே.ஹள்ளி வன்முறை சம்பவத்தில் கைதான அப்பாவிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்தில் யாரை விடுவிக்க வேண்டும் என்று பெயர்களை குறிப்பிடவில்லை. எத்தனை அப்பாவிகள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள் என்பதும் தெரியவில்லை. அப்பாவிகளை விடுவிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. வன்முறையில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
நிரபராதி யார் என்பதை அரசு முடிவு செய்யும்
வன்முறையின் போது அப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடு, போலீஸ் நிலையத்திற்கு தீவைத்தவர்களை நான் அப்பாவி என கூறவில்லை. அவர்களை நான் விடுவிக்க சொல்லவில்லை. அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் யார் நிரபராதி என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.