டேங்கர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதி தீப்பிடித்தது; வாலிபர் கருகி சாவு
|விஜயநகரில் டேங்கர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதி தீப்பிடித்தது. வாலிபர் உடல் கருகி உயிரிழந்தார்.
விஜயநகர்:
விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி தாலுகா பென்டிக்கேரி ரோட்டில் இன்று காலை டீசல் டேங்கர் லாரி சென்றது. அந்த சமயத்தில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், டேங்கர் லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் டீசல் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மோட்டார் சைக்கிளிலும் பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நாகராஜ மொரகெரே (வயது 32) என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தார். மேலும் அவருடன் வந்த சந்திர மொரகெரே (38) என்பவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.
அவர் ஹரப்பனஹள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தீவிபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து பற்றி ஹரப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.