உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ், ஒவ்வொரு இந்தியரின் மொழி - பிரதமர் மோடி பேச்சு
|உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
புதுடெல்லி,
3 நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு தன்னை வரவேற்க வந்தவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி என பெருமிதத்துடன் கூறினார்.
டெல்லி திரும்பினார் பிரதமர்
ஜப்பான், பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று தலைநகர் டெல்லிக்கு திரும்பினார்.
அவரை வரவேற்க டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக நாடுகளுக்கு நான் ஏன் தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்று இங்குள்ள மக்கள் கேட்கிறார்கள். இது புத்தர், காந்தி பூமி என்பதை நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாம் நமது பகைவர் மீதும் கரிசனை கொண்டிருக்க வேண்டும். நாம் கருணையால் ஈர்க்கப்பட்டவர்கள்.
நேசிப்பது இந்த நாட்டைத்தான்
இன்றைக்கு ஒவ்வொன்றிலும் இந்தியா என்ன நினைக்கிறது என்று உலகம் தெரிந்து கொள்ள விரும்புகிறது.
நமது நாட்டின் கலாசாரத்தைப் பற்றி பேசுகிறபோது உலகின் கண்களை நான் நேராகப் பார்க்கிறேன். காரணம், இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உதவிய மக்கள்தான் இதற்கு காரணம். இந்தியாவுக்கு வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள் என்றால் அவர்கள் நேசிப்பது நாட்டைத்தான், மோடியை அல்ல.
தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி
தமிழ்மொழி நமது மொழி. இந்த மொழி ஒவ்வொரு இந்தியரின் மொழி. இது உலகின் பழமையான மொழி. நான் பப்புவா நியூ கினியாவில் திருக்குறள் புத்தகத்தின் டோக் பிசின் மொழி பதிப்பை வெளியிடுகிற வாய்ப்பினைப் பெற்றேன்.
நான் கூறுவது 140 கோடி இந்தியர்களின் குரல் என்று உலகத்தலைவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் வெற்றிக்கதையைக் கேட்பதற்கு உலகம் ஆர்வமாக இருக்கிறது. இந்தியர்கள் தங்களது சிறந்த கலாசாரம், பாரம்பரியங்கள் பற்றி பேசுகிறபோது, ஒரு போதும் அடிமை மனநிலையால் பாதிக்கப்படாமல் தைரியத்துடன் பேச வேண்டும் என்று அவர் கூறினார்.